உர விநியோகத்தில் முக்கிய மாற்றம்! – தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசு தீர்மானம்

 விவசாய அமைச்சு, யூரியா உர விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களையும் இணைக்க தீர்மானித்துள்ளதாக கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடவடிக்கையின் மூலம் நாட்டில் நிலவி வரும் உர விநியோக சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




மேலும், “விவசாயிகள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதால், நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற தவறான கருத்தை பரப்ப வேண்டாம்” எனவும் அவர் பொதுமக்களையும் தொடர்புடைய தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

தற்போது நாட்டில் தேவைக்கேற்ப போதுமான அளவு உர கையிருப்பில் இருப்பதாகவும், எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் அரசாங்கத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தனியார் நிறுவனங்கள் இணைவதன் மூலம் உர விநியோகம் மேலும் விரைவாகவும் திறம்படவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டிருந்த கவலைகளை ஓரளவு குறைத்துள்ளதாகவும், பெரும் போக செய்கைகளுக்கான தயாரிப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.