அவிசாவளையில் 180 மி.மீ. கனமழை பதிவு – பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

 


நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றரும், தெரணியகலை பகுதியில் 122 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்று இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதிலும், அது இதுவரை எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அத்தனகலு ஓயாவின் தூனமலே அளவீட்டு நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 176 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கிரியுல்ல பகுதியில் நேற்று பதிவான 172 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி காரணமாக மா ஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, கிரியுல்ல மற்றும் பாதல்ஹம பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், இதுவரை வெள்ளப் பெருக்கு நிலை உருவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை பகுதிகளுக்கு இடையில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.