பலர் தினசரி தங்களுக்குப் பிடித்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவற்றில் சில உணவுகள் ஊட்டச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் கலோரி அதிகமாகவும் இருப்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்படுகிறது.
மைதாவால் தயாரிக்கப்படும் சேமியாவில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவாக இருப்பதால், இது உடல் எடை அதிகரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை உயர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதிலாக காய்கறிகள் சேர்த்த கோதுமை அல்லது கம்பு சேமியா சிறந்த தேர்வாக இருக்கும்.
அதேபோல் மைதா மாவில் தயாரிக்கப்படும் தோசைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கு மாற்றாக உளுந்து, அரிசி அல்லது சிறுதானிய மாவில் தயாரிக்கும் தோசைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ரவை உப்புமாவும் அதிகளவு ஊட்டச்சத்து வழங்காததால், இது விரைவில் பசியை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக சிறுதானிய ரவை மற்றும் அதிக காய்கறிகள் சேர்த்த உப்புமா ஆரோக்கியமான தேர்வாகும்.
பூரி சப்ஜி போன்ற உணவுகளில் எண்ணெய் மற்றும் கலோரி அதிகமாக இருப்பதால், இதனை அடிக்கடி காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
இனிப்புப் பொங்கலில் சர்க்கரை மற்றும் வெல்லம் அதிகமாக இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடும். எனவே இதை அடிக்கடி காலை உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான காலை உணவாக பாசிப்பருப்பு சில்லா, காய்கறி ஓட்ஸ், முளைகட்டிய பயறு சாலட், சிறுதானிய தோசை, அவித்த முட்டை, பழங்கள், நட்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
