இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், International Monetary Fund செயற்குழு, நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் Evan Papageorgiou கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில், வெளிநாட்டு நாணய கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக கூறினார்.
இந்த முன்னேற்றங்கள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரத்தை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சவாலான உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளபோதிலும், அவற்றை சமாளிக்கும் வகையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் கொள்கை கட்டமைப்பு கடந்த காலத்தை விட வலுவாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நிலைத்தன்மையான பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதும், மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை சீரமைப்பதும் இதுவரை கிடைத்துள்ள நன்மைகளைத் தக்க வைத்துக்கொள்ள முக்கிய காரணிகளாக இருக்கும் என IMF தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்ந்து முன்னோக்கி நகரும் நிலையில், இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்து மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் IMF தூதுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
