250 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பதிவு – கம்பஹா பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பு

 


நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நேற்று (21) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தூனமலை நீர் அளவீட்டு நிலையத்தின் தரவுகளின்படி, தற்போது 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையால் கம்பஹா, கட்டான மற்றும் வத்தளை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில இடங்களில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரையிலான கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், நிலைமைகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.