களனி கங்கை பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை – 24 மணி நேரத்தில் சிறிய வெள்ளம் ஏற்படும் சாத்தியம்

 


தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய உள்ளிட்ட பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் இந்த வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

களனி கங்கையின் மேல்நீரேந்து பகுதிகளில் தற்போது சுமார் 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரித்து வரும் ஆற்றின் நீர்மட்ட அளவீட்டு கருவிகளின் தரவுகள் மற்றும் தற்போதைய மழை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் பேரில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இச்சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.