காத்தான்குடி தீ விபத்தால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் பாதிப்பு.



மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட பாரிய தீ விபத்து தீயணைப்புப் படையினரின் தீவிர முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் கட்டிடத்திற்கும் அதனுள் இருந்த பொருட்களுக்கும் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்களுடன் காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீயணைப்புப் படையினரின் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் குறித்த பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களை மாற்று பாதைகளில் திருப்பி அனுப்ப போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.