எபோலா அச்சம்: மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு கனடா பயணத் தடை.



 எபோலா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் அடுத்த 90 நாட்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் கனடாவிற்குள் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் “புந்திபுக்யோ” வகை எபோலா வைரஸ் தேசிய தொற்றுநோய் நிலையை எட்டும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது.

மேலும், கடந்த சில வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்திருந்தது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தாலும் நோய் அறிகுறிகள் இல்லாத கனடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் சில வெளிநாட்டவர்கள் மே 30 முதல் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் பஹாமாஸ் நாடுகளில் இதுவரை எபோலா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.