75 மி.மீ. வரை பலத்த மழை: மக்களுக்கு அவதானிப்பு எச்சரிக்கை




 தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.