கடலுக்கு சென்ற 19 வயது இளைஞர் காணாமல் போன சம்பவம் பரபரப்பு



 களுவாஞ்சிகுடி கடற்பகுதியில் சிறிய படகில் மீன் பிடிக்கச் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போனுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக காணாமல் போன இளைஞரின் உறவினர்கள் நேற்று (24) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தேடுதலின் போது அவர் பயன்படுத்திச் சென்ற சிறிய படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இளைஞரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.