விஜய் இன்று (10) தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், சென்னை நகரம் முழுவதும் பரபரப்பும் கொண்டாட்ட சூழலும் நிலவுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற பின்னர், விஜய் மற்றும் அவரது கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை தமிழக ஆளுநர்யை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்குத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, விஜய்யுடன் மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இதில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ராகுல் காந்தி இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அவர் இன்று காலை சென்னை வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், இந்த நிகழ்வில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், QR குறியீடு கொண்ட அனுமதிப் பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, விஜய்யின் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.
