செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (09) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ந்து 12 நாட்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்றுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வு நடவடிக்கைகளின் போது, புதிய மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்த 5 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 261 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மற்றொரு எலும்புக்கூட்டின் மண்டையோட்டு பகுதி மட்டும் வெளிப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அது இன்னும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வில் மட்டும் 21 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அகழ்வு நடவடிக்கைகளின் போது மூக்குத்தி, நாணய குற்றிகள், ஆணிகள் மற்றும் மஞ்சள் நிற வளையல் துண்டுகள் உள்ளிட்ட 17 பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 1 ஆம் திகதி மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக அகழ்வு பகுதியை சுத்தம் செய்யும் பணிகளும் இன்று மேற்கொள்ளப்பட்டன.
