பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய
த்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற அதிரடி சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹஷீஷ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து Thai Airways விமான சேவையின் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப்பொதியை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சொக்லேட் பொதிகளைப் போன்ற வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 பொதிகளில் ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, 4 கிலோ 778 கிராம் எடையுடைய ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதன் சந்தை மதிப்பு சுமார் 4 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம்த்தில் ஆஜர்ப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
