சமஸ்த லங்கா சாசனாரக்ஷக மண்டலத்தின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம் மற்றும் மாவட்ட, பிரதேச செயலாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் வெசாக் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வருட அரச வெசாக் விழா மாத்தறை மாவட்டத்தின் திஹகொடை பகுதியில் அமைந்துள்ள மிதெல்லவல விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பாக கலாநிதி ஹினிதும சுனில் செனெவி கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, வெசாக் கொண்டாட்டங்கள் மத மற்றும் கலாசார பண்புகளை பேணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், கடந்த காலங்களில் காணப்பட்ட பேய் மாளிகைகள் மற்றும் ஒழுங்கற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அல்லது முற்றிலும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
