திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சிசு உயிரிழப்பு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவரும் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் போது, பிரசவத்தின் போது ஏற்பட்ட அவசர நிலை காரணமாக, விடுதி பெண் வைத்தியர் குறித்த இரண்டு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு 6 முறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் அந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வரவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த இரு வைத்தியர்களும் அச்சமயம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, கடமை நேரத்தில் அரச வைத்தியசாலை சேவையை புறக்கணித்து தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இருவரின் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விரிவான ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதன்பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் திருகோணமலை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
