அமெரிக்கா - ஈரான் ஒப்பந்த நம்பிக்கையால் உலக எண்ணெய் விலை சரிவு.




 அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்ற நிலை முடிவுக்கு வரும் வகையில் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

அதேவேளை, இந்த நம்பிக்கையால் ஆசிய பங்குச் சந்தைகளிலும் உயர்வு பதிவாகியுள்ளது.

ஈரான் அரசாங்கத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு மறுநாளே, குறித்த ஒப்பந்தத்தை அவசரப்படுத்தாமல் கவனமாக முன்னெடுக்குமாறு தனது பேச்சுவார்த்தைக் குழுவை அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று (24) காலை ஆசிய சந்தை நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 5 சதவீதத்தால் குறைந்து பேரலொன்றுக்கு 98.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க சந்தையில் வர்த்தகமாகும் மசகு எண்ணெய் விலையும் 5.3 சதவீதம் சரிந்து 91.50 டொலராக காணப்பட்டது.

முக்கிய கடல் வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறலாம் என ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். இருப்பினும், அதுகுறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி கடந்து செல்லும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை, கடந்த பெப்ரவரி 28 முதல் நிலவும் மோதல்களால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நீரிணை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையால் உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.