யாழ் சிறைச்சாலையில் வித்தியா வழக்கின் குற்றவாளி உயிரிழப்பு.



புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர், நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேருக்கு 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர் அந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.