அதிகப்படியான கடன் வழங்கலை கட்டுப்படுத்த மத்திய வங்கி புதிய நடவடிக்கை.

 


நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் உருவாகக்கூடிய அபாயங்களை குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய நிதியியல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, அண்மைக்கால நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்கள் மற்றும் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணங்களால் வாகன விலைகள் தற்காலிகமாக உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுகைச் சபையினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (Loan to Value Ratio - LTV) 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் புதுப்பிக்கப்படும் பழைய கடன்களுக்கும் இந்த வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக தங்கம் மற்றும் வாகனக் கடன்களின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த மெக்ரோபிரூடென்ஷியல் கொள்கை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.