தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் பல ஆளில்லா ட்ரோன் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுடன் ஆரம்பமான இந்த மோதல், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் உலக எரிசக்தி விலைகளின் உயர்வையும் ஏற்படுத்திய நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் தருணத்திலேயே இந்த புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்தை ஈரான் மற்றும் ஓமான் இணைந்து நிர்வகிக்கும் என ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட தகவலை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அந்த முக்கிய கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை, கடந்த திங்கட்கிழமையும் அமெரிக்கா “தற்காப்பு நடவடிக்கை” என்ற அடிப்படையில் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடல் கண்ணிவெடிகளை விதைக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
