நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அபாயம்! – பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை, மேலும் 2 நாட்கள் கனமழை

 நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லசந்த சூரியபண்டார தெரிவிக்கையில், அதிக நீர்மட்டம் கொண்ட நீர்த்தேக்கங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறினார்.




BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் தற்போது 65% நீர் நிரம்பியுள்ளதாகவும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும், மேலும் 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வெஹெரகல நீர்த்தேக்கம் வான்பாய்வதால் கதிர்காமம் பகுதிக்கு ஓரளவு வெள்ள அபாயம் காணப்படுவதாகவும், மாணிக்க கங்கை ஆற்றைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், இதுவரை பாரிய அளவிலான வெள்ள நிலை உருவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவிக்கையில், அடுத்த இரண்டு நாட்களும் நாட்டில் இதேபோன்ற மழை நிலை தொடரும் என கூறினார்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த அழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என்றும், அதன் தாக்கமாக தென்மேற்கு பருவக்காற்று செயற்பட ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மே 15ஆம் திகதிக்குப் பின்னர் தற்போதைய மழை நிலை படிப்படியாக குறையக்கூடும் என்றும், மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால், மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் மீண்டும் கனமழை அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்கள் தொடர்ச்சியாக வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை நேர மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது புயல் நிலைமை அல்ல என்றும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வானிலை கணிப்புகள் வெளியிடப்படுவதால் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் மெரில் மெந்திஸ் விளக்கமளித்துள்ளார்.