சமந்த வித்யாரத்ன, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி ஏற்கனவே நிதி திறைசேரி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பால் உர விலைகள் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் உரத்தின் விலையிலும் உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.
இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது 2 ஹெக்டேயர் வரை விரிவுபடுத்தப்பட்டு 10,000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் கூடுதலாக 5,000 ரூபா மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் உர விநியோகம் தடையின்றி தொடரும் என்றும், விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
