பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மொத்தம் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தின் கல்வடுகொட பகுதியில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், ஒரு விடுதியில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வயது 19 முதல் 35 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் காலி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, ஹிக்கடுவ பகுதியில் உள்ள தொடந்துவ பகுதியில் நடைபெற்ற மற்றொரு விசேட சுற்றிவளைப்பில், 35 இந்திய பிரஜைகள் மற்றும் 20 நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை விசேட அதிரடிப் படை மேற்கொண்டுள்ளது.
அவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கிய விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 25 கணினிகள், 119 கைபேசிகள், ரூ.750,000 பணம், ஒரு கார் மற்றும் ஒரு ஜீப் வாகனம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மிதிகம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 28 இந்திய பிரஜைகள் மற்றும் 5 நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, சட்டவிரோத சிகரெட் வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் இலங்கையில் வெளிநாட்டினர் தொடர்பான இணைய குற்றச்செயல்கள் குறித்து பெரிய அளவிலான விசாரணைக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
