தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இன்று அதிகாலை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகி, மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடுமையான பாதுகாப்புடன் 64 மையங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகளின் எண்ணிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர்களில், பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2 கோடியே 52 இலட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்களும், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்களும், மேலும் 4,517 திருநங்கைகளும் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தியுள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 85.10 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், சில தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது இந்தத் தேர்தலின் முக்கிய சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த முறை போட்டியிட்டுள்ளனர். இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக உற்சாகத்துடன் வாக்களித்திருப்பது, இந்தத் தேர்தலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் தங்கள் விருப்பமான கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் புதியதாக களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கிடையில் கடுமையான நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. குறிப்பாக, விஜய்யின் கட்சி கணிசமான வாக்குகளைப் பிரித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்து தமிழகத்தை யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வாக்கெண்ணிக்கை முடிவுகள் அரசியல் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 18,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
