ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை கைப்பற்றியது மிட்டல் குழுமம்: ஐபிஎல் உலகில் பெரும் அதிரடி ஒப்பந்தம்

 ஐபிஎல் தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் பெரும்பான்மை பங்குகளை உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தலைமையிலான குழுமம் வாங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பயிற்றுவிப்பாளராக உள்ள இந்த அணியில், சுமார் 1.65 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 15,600 கோடி ரூபாய்) மதிப்பிலான மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.




முன்னதாக கல் சோமானி தலைமையிலான குழுமத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மிட்டல், அவரது மகன் ஆதித்யா மிட்டல் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து இந்த அணியின் கட்டுப்பாட்டை பெற்றுள்ளனர். புதிய ஒப்பந்தத்தின் படி, மிட்டல் குடும்பம் சுமார் 75 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், ஆதார் பூனாவாலா 18 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகள் பழைய முதலீட்டாளர்களிடமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி வீரர்களின் சம்பளமும் ஏலத் தொகையும் மாற்றமில்லாமல் இருந்தாலும், இத்தகைய பெரிய தொழிலதிபர்களின் வருகை அணியின் நிர்வாகத் தரம் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

லக்ஷ்மி மிட்டல் உலக எஃகு துறையின் மிக முக்கியமான முகமாக அறியப்படுபவர். ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர், சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளைக் கொண்டவராக மதிப்பிடப்படுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது சொந்த மாநில அணியின் உரிமையாளராக மாறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.