ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: கப்பல்களை விடுவிக்க அமெரிக்கா நடவடிக்கை

 ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள சரக்குக் கப்பல்களை பாதுகாப்பாக விடுவிக்கும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான நிலையில் உள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், தடுக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளார். குறிப்பாக, பல கப்பல்களில் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக பல சரக்குக் கப்பல்கள் அங்கு தடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என ஈரான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.