நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் அறிக்கையின்படி, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு சுமார் 8,400 கன அடி நீர் தெதுறு ஓயா ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், மீதமுள்ள 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 2,915 கன அடி நீர் கிரிந்தி ஓயா வழியாக வெளியேற்றப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முகப்பு / இலங்கை /
உடன் செய்தி
/ மழை எச்சரிக்கை தீவிரம்! மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – பல பகுதிகளுக்கு அவதானிப்பு அறிவிப்பு
