2026 ஆம் ஆண்டுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை திருத்தும் நோக்கில், ‘நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்’ நிறுவனம் திருத்தப்பட்ட மின் உற்பத்தி செலவுக் கணக்கீட்டை அண்மையில் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதையே இந்த கட்டண திருத்த கோரிக்கைக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு அமர்வுகளும் அண்மையில் நிறைவடைந்துள்ளன.
அதேவேளை, தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் ஏற்பட்ட இழப்புகளை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 8% முதல் 14.4% வரை திருத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் நடைமுறை அமலாக்கம் தொடர்பான இறுதி அறிவிப்பே இன்று வெளியிடப்பட உள்ளது.
