நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் உள்ளிட்ட வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
.jpeg)