இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில், 2026 மே 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 15 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
மேலும், டெங்கு பரவல் அதிக ஆபத்து நிலவுகின்ற 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண ரீதியாகப் பார்க்கும்போது மேல் மாகாணத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நோயாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
மாவட்ட அடிப்படையில், நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவிலான பாதிப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் சுட்டிக்காட்டினார்.
.jpeg)