இலங்கையின் குறுக்கே தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், தெற்கு மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
