சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன்படி, குறித்த வீட்டைச் சோதனையிட்ட போது, படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையொன்றின் உள்ளே 79 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் அகற்றப்பட்டிருந்ததுடன், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெறவுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஃபர்கியுசன் வீதி பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முகத்துவாரம் உயன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கிரேன்ட்பாஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
