ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா வருவாய் குறைவு; இலங்கைக்கு 157 மில்லியன் டொலர்.



 இலங்கையின் 2026 ஏப்ரல் மாத சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது, 2025 ஏப்ரல் மாதத்தில் பதிவான 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 38.8 சதவீத வீழ்ச்சியை காட்டுகிறது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும்.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததுடன், அதனால் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளது. இதே காலத்தில் சுற்றுலாத்துறை மூலம் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகள் வருகை 2.3 சதவீதமும், வருமானம் 19.4 சதவீதமும் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.