சட்டவிரோத மதுபான சோதனையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்.



 அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகநபர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய முயன்றபோது, அவர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், காயமடைந்த அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.