இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 950,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 951,742 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த வருகையாளர்களில் அதிகளவானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 221,953 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாதம் 1 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 75,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆனால், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளமை வெளியிடப்பட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
