எரிபொருள் விலை குறைப்பு மற்றும் ‘விட்ஸ்’ கார் வாக்குறுதி குறித்து சஜித் கேள்வி

 


அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என அரசாங்கம் கூறி வருமானால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், நாட்டில் முதன்மை உபரி நிலவுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றும் தொடர்ந்து கூறி வருவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அத்துடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெருமளவு நிதியுதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சூழ்நிலையில், மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் என ஜனாதிபதி குறிப்பிடுவது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், திறைசேரியில் போதுமான நிதி இருப்பின் அந்த நிதியை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதா என்றும் வினவினார்.

மேலும், கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய ஆளுந்தரப்பினர் 12 இலட்சம் ரூபாவுக்கு ‘Vitz’ ரக கார் வாங்கும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தித் தருவோம் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாதம் 16,690 ரூபாவைக் கொண்டு ஒருவர் வாழ முடியும் என அரசாங்கம் கூறுவது நடைமுறைக்கு ஒவ்வாததாகும் எனக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் அந்தத் தொகையில் வாழ்வது சாத்தியமற்றது என விமர்சித்தார்.

மேலும், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வறுமைக் கோட்டை கணக்கிட்ட விதம் தவறானது என குற்றம்சாட்டிய அவர், அதுகுறித்து அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.