இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் போட்டிப் பரீட்சையில் பங்கேற்பு



 நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைக்கான பட்டதாரி போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்று (24) நாடு முழுவதும் நடைபெற்றது.

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் நோக்கில் இந்தப் பரீட்சை நடத்தப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,048 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்காக, அரச சேவையில் உள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

மேலும், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்கள் பரீட்சையில் தோற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு இந்தப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் காரணமாக பரீட்சை நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.