இலங்கை ரூபா ஒரே நாளில் 2.7% உயர்வு – 2023க்கு பின் மிகப்பெரிய வளர்ச்சி.



 கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டொலருக்கு எதிராக 2.7 சதவீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக 'Bloomberg' இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் இலங்கை ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நாளில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, சந்தையில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள அமெரிக்க டொலர்களை விற்பனை செய்ய முனைந்ததே ரூபா வலுப்பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது.

மேலும், ரூபாவின் மதிப்பை நிலைநிறுத்தும் நோக்கில் தனியார் வாகன இறக்குமதிகளுக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேவையான சந்தர்ப்பங்களில் சந்தை நடவடிக்கைகளில் மத்திய வங்கி தலையிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.