ஹேக்கிங், பிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக OpenAI புதிய பாதுகாப்பு வசதி



 ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து பயனர்களின் கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு அம்சத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணியாக விளங்கும் OpenAI, உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் ChatGPT தளத்திற்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய வசதியை வழங்கியுள்ளது.

இதன் மூலம் வழக்கமான கடவுச்சொல் (Password) அடிப்படையிலான லொகின் முறைக்கு பதிலாக, பயோமெட்ரிக் மற்றும் பாஸ் கீ (Passkey) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அதாவது, பயனர்கள் கைரேகை (Fingerprint), முக அடையாளம் (Face ID) அல்லது சாதன PIN போன்ற பாதுகாப்பு முறைகளின் மூலம் மட்டுமே கணக்கில் உள்நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக பாதுகாப்பு விரும்பும் பயனர்கள், YubiKey போன்ற ஹார்ட்வேர் பாதுகாப்பு சாவிகளை இணைத்து கூடுதல் பாதுகாப்பையும் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு அம்சம் ஹேக்கிங் மற்றும் பிஷிங் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் விருப்பமிருந்தால் மட்டுமே இதை பயன்படுத்தலாம் என்றும், விருப்பமில்லாதவர்கள் வழக்கமான முறையிலும் ChatGPT-ஐ பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.