இந்த மாதத்திற்குள் ஆசியாவில் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக உலகின் முன்னணி வணிகத் தகவல் தளமான புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அது மேலும் குறையக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறுகிய காலத்திலேயே இவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரித்துள்ளார்.
இந்த நிலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுப்பதற்கான தெளிவான திட்டம் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ரூபாயின் தற்போதைய வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், மக்கள் அனைவரும் இந்த சவாலுக்கு உறுதியாக முகங்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
