இந்த ஆண்டில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்

 


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த யானை மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 20 காட்டு யானைகளும், மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதன் காரணமாக 10 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், விவசாயக் கிணறுகளில் விழுந்து 5 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற பல்வேறு காரணங்களாலும் யானைகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பிராந்தியத்திலேயே அதிகளவிலான யானை மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் வனஜீவராசி பிராந்தியங்களிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், காட்டு யானைகளின் தாக்குதல்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.