கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு! பல பகுதிகளுக்கு அவசர அவதானிப்பு அறிவிப்பு

 


நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கம், கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல மற்றும் நாலந்த நீர்த்தேக்கங்கள், மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருகின்றன.

கலா ஓயா வடிநிலப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையால் இராஜாங்கனை, தேவஹுவ மற்றும் வெமெடில்ல நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் ஊடாக வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேவேளை, கிரிந்தி ஓயா வடிநிலப் பகுதியில் பெய்து வரும் மழையால் லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொட்டஆர நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 7,100 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு, மாணிக்க கங்கைக்குள் வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

அத்துடன், அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மருதமடு உள்ளிட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாயும் நிலையில் உள்ளன.

தொடர்ந்து பெய்யும் மழையால் நீர் வெளியேற்ற அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.