எரிபொருள் விலை உயர்வு இல்லை – பொதுமக்கள் அச்சம் தேவையில்லை.

 


எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புகள் தற்போது இலங்கையில் போதுமான அளவில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் உடனடியாக பெரிய அளவிலான உயர்வோ அல்லது குறைப்போ எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடகங்களில் எரிபொருள் விலை உயர்வு குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து மக்கள் எரிபொருள் சேமிப்பில் ஈடுபட்டதாகவும், ஆனால் இதுவரை அத்தகைய எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனவும், தேவையான அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், வரும் கப்பல்களில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு அடுத்த மாதத்திலும் விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் டீசல் விலை சில நேரங்களில் உயர்ந்திருந்தாலும் தற்போது அது படிப்படியாக குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 700 ரூபாய் வரை எரிபொருள் விலை உயரக்கூடும் என இருந்த அச்சம் தற்போது இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.