டீசல் லீற்றருக்கு 600 ரூபாய் வரை உயர வேண்டும் – பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

 


அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் 600 ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (25) இரவு டிவி தெரணவில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மே 6 ஆம் திகதி தரவுகளின் அடிப்படையில், பெட்ரோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், அதனை மானியங்களின் மூலம் ஓரளவுக்கு சமநிலைப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தொடர்ந்தால், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும், அதன் விளைவாக மீண்டும் எரிபொருள் விலை உயர்வும், பணவீக்கமும் அதிகரிக்கும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலை உயர்வுடன் சமூக மானிய திட்டங்களும் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, மானியம் உண்மையில் தேவையான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பயண தூரத்தின் அடிப்படையில் டீசல் மானியம் வழங்குவது சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணக்காரர்களை விட பேருந்துகளில் பயணிக்கும் சாதாரண மக்களுக்கு முன்னுரிமை அளித்து மானிய திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.