வீடியோ உருவாக்கம், கோடிங், ஷாப்பிங் – அனைத்திற்கும் புதிய AI கருவிகளை வெளியிட்ட கூகுள்



உலகளாவிய பயனர்களின் தினசரி பணிகளை தானாக மேற்கொள்ளக்கூடிய பல புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான Google I/O நிகழ்வில், “Agentic AI” எனப்படும் சுயாதீனமாக செயல்படும் AI தொழில்நுட்பமே இந்த முறை முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் முக்கிய தயாரிப்பாக ‘Gemini Spark’ எனப்படும் புதிய AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த AI Agent, மின்னஞ்சல்களை பரிசோதித்தல், கூட்டக் குறிப்புகளை ஒழுங்குபடுத்துதல், தினசரி பணிகளை பட்டியலிடுதல் போன்ற செயல்களை தானாகவே மேற்கொள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் உரையாற்றிய Sundar Pichai, “நாம் தற்போது அதிகாரப்பூர்வமாக Agentic Gemini யுகத்திற்குள் நுழைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு 400 மில்லியனாக இருந்த Gemini செயலியின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் தற்போது 900 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், கூகுள் தனது புதிய AI மாடல் வரிசையான ‘Gemini 3.5’-ஐ உலகளாவிய பயனர்களுக்காக வெளியிடத் தொடங்கியுள்ளது. அதன் முதல் பதிப்பாக ‘Gemini 3.5 Flash’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் வேகமான செயல்திறன் மற்றும் Coding பணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகவும், போட்டி மாடல்களை விட நான்கு மடங்கு வேகமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், வீடியோ உருவாக்கத்திற்காக ‘Gemini Omni’ எனப்படும் புதிய AI மாடலும் அறிமுகமாகியுள்ளது. Text, Image மற்றும் Audio கட்டளைகள் மூலம் யதார்த்தமான உயர்தர வீடியோக்களை உருவாக்க இந்த மாடல் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ‘SynthID’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க் தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் தேடுபொறியில் மிகப்பெரிய மாற்றமாக “Intelligent Search Box” வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீளமான கேள்விகளை உள்ளிடுவதுடன், படங்கள், வீடியோக்கள் மற்றும் Chrome Tabs ஆகியவற்றையும் தேடலுக்கான உள்ளீடுகளாக பயன்படுத்த முடியும்.

இதற்கு மேலாக, ‘Universal Cart’ எனப்படும் புதிய ஸ்மார்ட் ஷாப்பிங் வசதியும் அறிமுகமாகியுள்ளது. Google, YouTube மற்றும் Gmail ஆகிய தளங்களில் பயனர்கள் பார்க்கும் பொருட்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றின் விலை குறைப்பு மற்றும் சலுகைகள் குறித்து AI மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.