நாடளாவிய ரீதியில் கோர விபத்துகள்: நால்வர் பலி


 


நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி கோர விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்று (13) இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.

அஹங்கம – இமதுவ வீதியில் கடுகஹவத்தை சந்திக்கு அருகில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 25 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, திருக்கோவில் – பொத்துவில் வீதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 42 வயதுடைய நபர் கடுமையாக காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரத்துபஸ்வல – ஹேனேகம வீதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 24 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், பிடிகல – பெலவத்தை வீதியில் நேற்று காலை இடம்பெற்ற மற்றொரு விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பகுதிகளின் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.