இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாளை மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை! – சட்டத்தரணிகள் அவசர ஆலோசனை

 மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 9.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக சில முக்கிய சட்ட ரீதியான அம்சங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவுடன் விசேட ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SriLankan Airlines நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அந்த வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் வலுக்கட்டாயத்தின் கீழ் பெறப்பட்டதாக கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி மூலம் தெரிவித்திருந்தார் என சட்டத்தரணி மனோஜ் கமேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில், அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், “சட்டவிரோதமான வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார். அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பிச் செல்லும் நபர் அல்ல. எனினும், சில சட்ட அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என மனோஜ் கமேஜ் மேலும் தெரிவித்துள்ளார்.