வீடு வாடகைக்கு விடுபவர்கள் கவனம்! – பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

 




வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்களை வழங்கும் சொத்து உரிமையாளர்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக வாடகைக்கு பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி மற்றும் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, போலியான தகவல்களை வழங்கி சொத்துகளை வாடகைக்கு பெறும் சிலர், பின்னர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வீடு அல்லது கட்டிடங்களை வாடகைக்கு வழங்கும் முன், அந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை, நிரந்தர முகவரி, தொழில் விபரம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வாடகை ஒப்பந்தங்களை சட்டபூர்வமாக பதிவு செய்து வைத்திருப்பதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.