உலக அறிவியல் இதழில் வெளியான இலங்கை புதிய கண்டுபிடிப்பு.



 மாத்தளை மாவட்டத்தின் தும்பர மலைத்தொடருக்கு உட்பட்ட புவக்பிட்டிய பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைக்கு மாத்திரமே உரித்தான புதிய பாலூட்டி (எலி) இனமொன்றை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து அறிவியல் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

பேராசிரியர் சுயாமா எச். போயகொட, பேராசிரியர் மாதவ மீகஸ்கும்புர மற்றும் கலாநிதி களுகம் மனமேந்திர-ஆரச்சி ஆகியோரின் நீண்டகால ஆய்வின் பின்னர் இந்த முக்கிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய இனத்துக்கான அறிவியல் ஆய்வு அறிக்கை உலகப் புகழ்பெற்ற “ZooKeys” அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட புதிய இனத்திற்கு “Mus dumbara” எனும் அறிவியல் பெயர் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஆங்கிலத்தில் “Dumbara valley spiny mouse” என அழைக்கப்படுகிறது.

சிங்களத்தில் இது “දුම්බර කටු හීන් මීයා” எனவும், தமிழில் “தும்பர பள்ளத்தாக்கு முள் எலி” எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய இனம் பெரும்பாலும் உலர் வலய சுற்றுச்சூழல் பகுதிகளில் காணப்படும் எலி இனங்களுக்கு மாறாக, ஈரவலய மலைக்காடுகளில் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக பாரம்பரிய தும்பர வனப்பகுதியில் இத்தகைய புதிய உயிரினம் கண்டறியப்பட்டிருப்பது, அந்தப் பிராந்தியத்தின் தனித்துவமான பல்லுயிர் வளத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.