புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு வேகம்! – டிஜிட்டல் வசதிகள், ஆசிரியர் பயிற்சி குறித்து பிரதமர் முக்கிய அறிவிப்பு

 



கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி துறைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நாலக கலுவெவ கல்விச் சீர்திருத்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து முக்கிய துறைகள், புதிய கற்றல் அலகுகள் (Modules) தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டி புத்தகங்கள் உருவாக்கம், ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் பாடசாலைகளில் டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்வி முறைகளை கண்காணிக்கும் திட்டங்களில் ஆசிரியர் ஆலோசகர்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் அறிவு மற்றும் திறன் வளர்ச்சியை துல்லியமாக மதிப்பிடக்கூடிய புதிய மதிப்பீட்டு முறை அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், பாடத்திட்டங்களை மீளாய்வு செய்யும் போது துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் கற்பித்தல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஞானமுத்து ஸ்ரீநேசன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.