ஹட்டன் - போடைஸ் வீதி பகுதியில் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும், நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடாததாகவும் குற்றஞ்சாட்டி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை (07) கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் இந்த வீதியில் இடம்பெற்ற துயரமான பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பான போக்குவரத்து சேவையை கோரி மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், “தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு உயிர்கள் பலியாகின. இதன் பின்னர் தினமும் பயணிப்பதே பயமாக மாறியுள்ளது,” என கவலை வெளியிட்டனர்.
மேலும், பேருந்துகள் சரியான நேரத்தில் சேவையில் ஈடுபடாததால் மாணவர்கள் பாடசாலைக்கு தாமதமாகச் செல்வதுடன், பொதுமக்களின் வேலைகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
- பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை வழங்கல்
- நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்தல்
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கல்
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
